எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். மீரா செல்வகுமார் பிடிச்ச பிள்ளையாரப்புச்சி


என் முகநூல் நண்பர் செல்வகுமார். இவர் ஒரு ப்லாகரும் கூட. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளார். புதுக்கோட்டைக்காரர்.மழை பற்றியும் மழலைகள் பற்றியும் இன்னும் பலவும் கொண்ட இவரது கவிதைகள் பல படித்திருக்கிறேன். ஈஷா பற்றிய இவரது பதிவு கவனத்துக்குரிய ஒன்று. நல்ல விளாசல்.

இவரிடம் நேற்று ”செல்வா என் ப்லாகுல சாட்டர்டே போஸ்ட் நு ஒன்னு போடுறேன்
அதுக்கு ஏதும் எழுதித் தாங்க ஒரு 4 பாராலேருந்து ஒரு கட்டுரையே இருக்கலாம்.எந்த டாபிக்வேணாலுமெழுதுங்க.சாட்டர்டே போஸ்ட் & சாட்டர்டேஜாலி கார்னர் அப்பிடின்னு ரெண்டு போஸ்ட் போடுறேன். இதுல எது எழுதினாலும் சரி. சீரியஸாவோ சிரியஸாவோ இன்னிக்கு நைட்டுக்குள்ள அனுப்பிடுங்க ப்ளீஸ். ( எனக்கே சாட்டர்டே ஜாலி கார்னர் மறந்திடும் போலிருக்கு. ) புகைப்படம் ஒண்ணும் அனுப்புங்க. ஷேர்ஸ் பத்தி இல்லாட்டி நீங்க ஷேர் பண்ணிக்க விரும்புற எந்த விஷயம் சம்பவம் பத்தியும் அனுப்பலாம். ” என்று கேட்டேன். ( அப்பாடா ஒரு ப்லாகர்கிட்ட கேட்டுட்டோம். உடனே அனுப்பிருவாங்க என்று சந்தோஷம் ) ஒரு மணி நேரத்துலேயே அனுப்பிட்டாரு ! பதிவர்கள் எப்போதுமே பெஸ்ட் & ஃபாஸ்ட் ! :) .

அவர் தந்த பதிலை எடிட் பண்ணாம ( சாபம் போடப் போறாரு . இருந்தாலும் பரவாயில்லை ) அப்பிடியே போடுறேன். :) 


 

////இப்டி திடீர்னு கேட்டா என்னத்த எழுத? குருட்டுப்பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி முழிக்கிறேன்.. நாமால்லாம் நல்ல நாள்லயே தில்லநாயகம்..


சரி...இறங்கியாச்சு...சாண் போனா என்ன முழம் போனா என்னன்னு ஒரு பிள்ளையார்சுழியப்போடலாம்னா.. அட... பிள்ளையாரையே எழுதிடலாம்னு சட்டுன்னு ஒரு யோசன..



வியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் கொம்ப ஒடிச்சு எழுதுன மாதிரி... அவர நெனச்சுக்கிட்டே போன்ல விரல ஒடிச்சு ஆரம்பிச்சாச்சு... ஷ்...அப்பா... கண்ணக்கட்டுதே...


ஆசிரியர்களைப்பற்றி அநேகர் சொல்லிவிட்டதாலும்.. பிள்ளையார் பற்றி ஏதாச்சும் சொல்லப்போய் அதன் விளைவுகளை சந்திக்க சக்தி இல்லாததாலும்.. என் கடந்துபோன பால்யத்தின் பிள்ளையார் சதுர்த்தியை மட்டும் சொல்லிவிட்டு போகலாம்.


பிள்ளையார் சதுர்த்தி என்பது தீபாவளிக்கு முன் வரும் மணியின் ஓசை. குளத்தின் ஓரத்தில் களிமண் எடுத்து வந்து கூட்டமாய் உட்கார்ந்து பிடிக்க ஆரம்பித்தால் எனக்கெல்லாம் அனுமார்களே அமைவார்கள்..



இப்பத்தான் கலர்கலரா பிள்ளையாருக்கு பெயிண்ட் அடிச்சு மொத்தமா தூக்கிட்டுப்போறாக.. எங்க காலத்துலல்லாம் அது துப்பரவா கிடையாது... முதல்ல ஞாயிற்றுக்கிழமல வருதான்னு பார்க்குறது. வாரநாள் ல வந்தாத்தான் சவுரியம்..


அண்ணாமலை அண்ணன் காலைலயே சின்ன களைக்கொத்திய எடுத்துட்டு வாங்கடான்னு கூட்டிட்டு குளத்துக்கரைக்கு போயிடுவார்... நல்ல ரொம்பவும் ஈரமில்லாத,காய்ஞ்சும் போயிடாத இடத்தைப்பார்த்து தோண்டுங்கடான்னு சொல்லுவார்.. மனுஷன் ஒருவருஷம் கூட அவரா தோண்டுனதில்ல....

கொண்டு போன மண்ணுகூடையெல்லாம் ரொப்பி சுமக்க முடியாம சுமந்துட்டு வந்தா.. கைகால் எல்லாம் நாறிப்போயிருக்கும்.. வீட்டுக்குவந்து அப்பாவுக்கு தெரியாம அவுத்துப்போட்டுட்டு அவசரமா ஒன்ன மாட்டிட்டு சீக்கிரம் போயாகனும்..இல்லாட்டி களிமண்ணை காணாமப்போக்கிருவானுங்க.. ஒன்னும் தூக்கிட்டுப்போயிட மாட்டாய்ங்க..பிள்ளையார பெருசா புடிச்சிடுவாய்ங்க அம்புட்டுத்தான்.


அண்ணன் முதல்ல அவருக்குத்தான் புடிப்பாரு.. பாலும் தெளிதேனும்.. அப்படின்னு ஓதிட்டே பிடிச்சு முடியறதுக்குள்ள பசிவந்துடும்... வீட்டுக்கும் போகமுடியாது..இங்கயும் வேலை முடியாது... விடுறா..இன்னைக்கு பிள்ளையாரப்புச்சிக்கு விரதம்னு மனசிக்கல்லாக்கிகிட்டு.நாமளே புடிப்போம்னு ஆரம்பிச்சா கழுதப்பய மண்ணு அப்படி ஒரு உருவமாத்தான் வரும்.. வயிறுமட்டும் அப்டி இப்டி வந்துடும்..தும்பிக்கைதான் நீண்டுபோகும்..பாதியா வெட்டினா பாவமா மூக்கறுபட்ட சூர்ப்பநகை மாதிரி இருப்பாரு...

ஒருவழியா கண்ணுக்கு புளியங்கொட்டையை ஒட்ட வச்சுட்டுப்பார்த்தா அப்புச்சியா அனுமாரான்னு நமக்கே சந்தேகம் வரும்னா...பாவம் அவருக்கு எவ்ளோ கோவம் வரும்.. விடு நம்ப அப்புச்சி தானேன்னு ரெண்டு கொட்டு போட்டுட்டு(நம்ம தலைலதான்) நாலு உக்கிய போட்டுட்டு அண்ணன பார்த்தா அழகா செஞ்சுட்டு சாந்துப்பொட்டுல கலரடிச்சுட்டு இருப்பாரு.


கெஞ்சிக்கூத்தாடி நம்ம பிள்ளையாரையும் கைய வைக்கச்சொல்லி காலில் விழாத குறையா கெஞ்சுனத்து அப்பறமா ஒரு பொட்டு மட்டும் வச்சுட்டு போதுமாடான்னு கேட்பாரு... விட்டது வில்லங்கம்னா..இனித்தான் விசயமே இருக்கு.. அப்புச்சி செஞ்சுட்டு காச வைக்காம கரைக்கப்போட்டா கண்ணைக்குத்துவார்னு ... வீட்டுக்கு ஓடி அம்மாவை நச்சரிச்சு நாலணா வாங்குறதுக்குள்ள மணி நாலாயிடும்.. பாவம் அப்புச்சிய அப்படியே தூக்கி தலைகீழாப்புடிச்சு காசைச் சொருகிட்டு.. திருப்பி உட்காரவச்சா ஒரு பக்கமா சாய்ஞ்சு பாவமாத்தான் இருக்கும்...விடுங்க அவர் சாமி எப்டி உட்கார்ந்தாலும் சரிதான்..


உச்சமா .. எல்லாபிள்ளையாரையும் ரோட்ல உட்கார வச்சு அருகம்புல்லு, அண்ணன் வீட்ல சுட்ட நாலு கொழுக்கட்டை,ஒருலிட்டர் பொரின்னு ஏமாத்திட்டு இருக்கும்போது..உலகப்பொருட்காட்சிய பார்க்குற மாதிரி வருவாய்ங்க பாருங்க பெருசு எல்லாம்.. அப்படி ஒரு சிரிப்பாணி அள்ளும்... சரி சரி..தூக்கிட்டுப்பொய் கரைச்சுட்டு வாங்கடான்னு சொல்லிடுவாங்க... மறுபடியும் குளத்துக்கு தூக்கிட்டு போய் கரைக்கும் போது காசை எடுக்க ஒரு போட்டி நடக்கும் பாருங்க.. இப்பல்லாம் என்ன ஒலிம்பிக்ல நீச்சலடிக்கிறாக..

முங்கு நீச்சல்லயே ஒருத்தன் மூனு பிள்ளையார்ட்ட காசைக் கழட்டிடுவான்.
காலைல ஒரு சட்டை..இப்ப ஒரு சட்டைனு சக்தியோட வீட்டுக்குப்போனா "சப்"னு ஒரு அடிவிழும் பாருங்க... அடப்பிள்ளையாரப்பா உன் பக்தனுக்கா இந்தக்கதின்னு ஆறா ஓடும் கண்ணீர்.. சரி..வீடுன்னா அடிக்கிறதும்,விடிஞ்சா திட்றதும் சகஜம் தானப்பான்னு..

படுக்கப்போதுதான்.. அட அடுத்த வாரம் ஆயுதபூச வருதே...எங்கல்லாம் பொரி வாங்கப்போகலாம்னு யோசனை வரும்... ஆயுதபூசை,அப்டியே தீபாவளி... அட..அட... இப்படித்தாங்க..எங்க பிள்ளையார் சதுர்த்தியெல்லாம் பூர்த்தியாச்சு... அட ரொம்ப நேரஞ்சொல்லிட்டனோ... பிள்ளை பிள்ளையார் வாங்கனும் சொன்னாள்..மறந்துட்டேன்.. கம்ப்யூட்டர் வச்சுருக்க மாதிரி பிள்ளையார் வேணுமாம்... எங்க இருக்கோ...ஏங்க..உங்களுக்கு எதும் தெரியுமா?

டிஸ்கி:- மிக மிக சுவாரசியமா நீங்க பிள்ளையார் பிடிச்ச கதையை சொன்னீங்க செல்வா. பிள்ளையாரை ஏமாத்திட்டு இருக்கும்போது என்பதைப் படிச்சி சிரிப்பை நிறுத்த முடியல. நல்லவேளை அனுமார் ஆகாம தொந்தி சரிஞ்ச பிள்ளையாராவே காட்சி கொடுத்தாரே. அப்பவெல்லாம் ECO FRIENDLY பிள்ளையார். அதுபோல இல்லாம இப்பவெல்லாம் சாயமடிச்சி பிரம்மாண்டமா செய்து பின்ன அவரக் கடல்ல அடிச்சி கரைக்கிறதப் பார்த்தா கஷ்டமா இருக்கு. ரொம்ப அழகா பிள்ளையாரைப் பிடிச்சதுக்கு வாழ்த்துகள். எனக்குப் பிடிச்ச பிள்ளையாரைப் பத்திச் சொல்லி இந்தப் பிள்ளையார் சதுர்த்தியை பிரமாதப் படுத்திட்டீங்க. கேட்டோடனே அனுப்பிச்சமைக்கு நன்றி. உங்களுக்கு விநாயர் சதுர்த்தி வாழ்த்துகள்.

ஒண்ணு பண்ணுங்க ஒரு கம்ப்யூட்டர் வாங்கி அதுல களிமண் பிள்ளையாரைப் பிடிச்சு மகளுக்குக்  கொடுங்க. :)

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் மக்காஸ்.:)


13 கருத்துகள்:

  1. என்னயும் கண்டிச்சு எழுத வச்சுட்டீகளே..

    என்னமோ எழுதினேன்..என்னமா எழுதிட்டேன்றீங்க...
    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்..
    நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கவிஞர்செ ல்வக்குமார் அவர்களின் எழுத்துக்களைத் தங்கள் பதிவில் படித்து மகிழ்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. ;நான் ஒன்று சொல்வேன்' ப்ளாக் ஓனர் என்று நினைக்கிறேன்! ஒரு விசேஷம் பற்றி சுவாரஸ்யமா சொல்லியிருக்கறது விசேஷம். அதை மொபைலிலிருந்து டைப் பண்ணினதா சொல்லியிருக்காரே... ஆச்சர்யம். மஹா பொறுமை வேண்டும் அதுக்கு!

    பதிலளிநீக்கு
  4. பிள்ளையார் பிடித்த கதை. வெகு ஸ்வாரஸ்யம். பாராட்டுகள் செந்தில்.

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  5. செல்வா அண்ணா பிள்ளையார் பிடித்த கதை கலக்கல்...

    பதிலளிநீக்கு
  6. Kavignar Meera.Selvakumar ayya endral swaarasyathirku kuraivurukadhu. Eppodhum pol vinayagar sadhurthiyum arumai kondattam. Puduchu vacha pillaiyaare idhai vaasithu siripar. Athanai yedhaartham adhil avvalavu nagaichuvai.
    Sago Sree ram, indha kavignar ellavatraiyum mobile laye dhan type seidhu veliyiduvar. Nandri Ayya.

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் செல்வாவுக்குள் எத்தனை TKC,கல்கிகள் இருக்கிறார்கள்..வெளிக்கொணர்ந்த பிள்ளையாருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அப்போ அப்டி. இப்போ மாசக்கணக்கா மெனக்கெட்டு,விதவிதமாச் செஞ்சு வண்ணமெல்லாம் அடிச்சு, வீதிக்குப் பத்தா வச்சு அடுத்த மதத்துக்காரனையும் வம்புக்கு இழுத்து, ஆயிரத்தெட்டு போலீசு காவலோட அந்த காக்கும் கடவுளை கம்பால அடிச்சு நொறுக்கி, கெடக்குற கொஞ்ச நஞ்சத் தண்ணியில போட்டுக் கரைச்சுல்ல நாசப்படுத்துறாங்கே.

    பதிலளிநீக்கு
  9. கவிஞருக்கு கவித மட்டும் தான் அல்ல, பேச்சு நடையையே உரைநடையாக்கி எழுத்து வடிவில் இயல்பாகவும் சொல்லவும் முடியும் என்பதனை சூசகமாக சொல்லி விட்டார். கி.ரா. பாதிப்போ? வாழ்த்துகள். இருவருக்கும்தான்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி செல்வா:)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம். ஆம்.

    நன்றி சந்தர்

    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி நேசம் 2008.

    நன்றி மஹா சுந்தர்

    ஆம் பாவலர் பொன் கருப்பையா சார்.கருத்துக்கு நன்றி

    உண்மைதான்.. நன்றி தமிழ் இளங்கோ சார்.

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...