வெள்ளி, 24 நவம்பர், 2017

கேட்காதவள்.கேட்காதவள்.

கார்த்திகை.. எங்கே சொல்லு “ மாடிப்படியோரம் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அமுதாக்கா கேட்டாள்.

“தார்த்திதை” என்றாள் ஆனந்தி. 

செல்லமாகத் தட்டித் திரும்பவும் ”கார்த்திதை” ன்னு சொல்லுடி வாலு ” என்றாள்.

”தார்த்திதை” என்றாள் அவள் முகத்தைப் பார்த்தபடியே ஆனந்தி. 

”நாக்கை எதுக்குப் பல்லோட ஒட்டுறே… கா.. கா சொல்லு. கார்த்திகை ” என்றாள். ”தா தா தார்த்திதை” என்று அவள் சொல்லவும் மாடிப்படியிலிருந்து இறங்கி இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கார்த்திகேயன் செல்லவும் சரியாக இருந்தது. வெட்கத்தோடு இவளை இழுத்து அணைத்து உம்மா கொடுத்தாள் அமுதாக்கா. சரியா சொல்லிட்டோம் போல என நினைத்து இவளும் பதிலுக்கு அக்காவுக்கு உம்மா கொடுத்தாள். கன்னமெங்கும் அக்காவின் பவுடர் மணத்தது.

யேய்.. உக்கி போடுடி.. பெரியம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க. கேக்காதமாதிரி சொப்பு வைச்சு விளையாடிட்டு இருக்கே. வா இங்கே இந்தப் புள்ளையாருக்கு எதுக்கால உக்கி போடு “

காதைப் பிடித்து முருகு அத்தான் இழுத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைக்க என்ன செய்தோம் எனக் குழம்பியவாறு தொடை வலிக்க வலிக்க அவன் போதும் என்று சொல்லும் வரை உக்கி போட்டு அமர்ந்தாள் ஆனந்தி. வலியில் கண் கசிந்தது. ரௌடிப்பய. முறைச்சா அடிச்சாலும் அடிச்சிருவான். 

“எப்பக் கூப்பிட்டாங்க.” அது கூடத் தெரியாமயா விளையாடிட்டு இருந்தோம். குனிந்து அமர்ந்து சொப்பு சாமான்களை அடுக்கினாள். 

“அத்த கூப்பிட்டீங்களா” ஓடிப்போய்க் கேட்டாள். 

“ஆமா. எப்பக் கூப்பிட்டேன். எப்ப வர்றே .. வர வர மெய்மறந்துகிட்டே போறே “ என்று டோஸ் வைத்த அத்தை மாங்கொட்டைகளைக் கொடுத்து ”இந்தா போய் சாப்பிடு” என்றாள். பெரிது பெரிதாக துண்டு துண்டாக இருந்ததே. புளித்த கொட்டைகளை சாப்பிட்டுவிட்டுக் கைகழுவினாள். 

டீ ஆனந்தி.. நில்லு நில்லு” என வேக வேகமாக ஓடி வந்து காலண்டரைப் பறித்துக் கொண்டாள் புஷ்பா. வகுப்புத் தோழி. 

வியாழன், 23 நவம்பர், 2017

வசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-

வசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-


 1972 இலும் 1964 இலும் வந்த இந்த ரெண்டு படங்களையும் பார்க்காதவங்களே இருக்க முடியாது. 750 நாள் எல்லாம் ஓடின படங்கள். இன்னைக்கு தியேட்டருக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லா கல்லா கட்டாம போகாது. 

இந்த இரண்டு படங்கள் மட்டுமில்ல இன்னும் பல படங்கள் பார்த்து சேலை முந்தானையைப் பிழிந்து தொடைச்சுக்குற அளவுக்கு ஒரே அழுகாச்சியா அழுதிருக்கேன். ஆனா இவை இரண்டும் இன்னிக்குப் பார்த்தாலும் ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கிற ஸ்பெஷல் படங்கள்.

புதன், 22 நவம்பர், 2017

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 6 :-

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 6 :-
ஆதித்யா பள்ளியிலிருந்து வந்ததில் இருந்து ஏனோ மௌனமாக இருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் வருத்தம் எனப் புரிந்தது ஆராவமுதனுக்கு. ஆராதனாவும் உம்மென்றிருந்தாள் அண்ணனுக்கு ஜோடியாக. இதைப் பார்க்கத்தான் விசித்திரமாக இருந்தது அவருக்கு

மாலை வேளைகளில் அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வாக்கிங் செல்வதுண்டு. அங்கே குழந்தைகள் விளையாடும் சீசா, சறுக்கு மரம், ஊஞ்சல் எல்லாம் இருந்தன.

ரம்யாவிடம் குழந்தைகளை பார்க்குக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

இருவரும் பள்ளி விட்டு வந்ததில் இருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதையும், யூனிபார்மைக் கழட்டிவிட்டு வீட்டில் போடும் காஷுவல்ஸை அணிந்து கொண்டதையும் கொடுத்த மைலோவை சத்தமில்லாமல் வாங்கி அருந்தியதையும் ரம்யா பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

பெங்களூருவில் இருந்த வரைக்கும் மால் மாலாகப் போய் சினிமா பார்த்ததுண்டு ஆனால்  எம்டிஆர் டிஃபன் செண்டர்  போக முடியவில்லை. அங்கிருந்து வந்ததும் ஆக்டேவில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது.  பக்கத்திலேயே தாஜ் கேட்வே. இங்கே ஒருவர் தங்க ரூம் வாடகை 3, 000 என்றால் அங்கே 6,000 !!!

கூடுதலாகத் தங்கும் ஒவ்வொருவருக்கும் கட்டணம் உண்டு. தனித்தனியாக இன்னும் டபிள் பெட்களைக் கட்டிலோடு நகர்த்திக் கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள். இவ்வளவு வசதியான ஹோட்டலைப் பார்த்ததேயில்லை இதுவரை. ஒருவர் தங்கும் அறையே ஒரு வீடு அளவு இருந்தது.

பெங்களூர் சாந்தி  நகரில் டபுள் ரோட்டில் ( ஏரியாவுக்கு ஒன்றாய்  நிறைய ஆக்டேவ் ஹோட்டல்கள் இருக்கின்றன இங்கே ) கனரா பாங்குக்கு எதிரில் கே ஹெச் ரோட்டில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல்.
செல்லும் நடைபாதை முழுவதும் பூவாசம். இந்தக் காரிடாரில் சென்று லிஃப்டில் முதல் மாடியில் இருக்கும் ரிசப்ஷனில் சாவியை வாங்கிக் கொள்ளலாம்.
இதோ மூன்றாம் மாடியில் உள்ள அறைக்கு வந்தாச்சு.

செவ்வாய், 21 நவம்பர், 2017

கலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RICE. MY CLICKS.

எலுமிச்சை சாதம்.
சிம்பிள்  தயிர்சாதம்.
ஒயிட் ஃப்ரைட் ரைஸ்.

கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.

இது கொச்சுவேலி பீச்சில் உள்ள ஏரியை ஆக்கிரமித்திருக்கும் வெங்காயத்தாமரை.
அதே பீச்சில் உள்ள சிற்பம். லோட்டஸ்- கல் தாமரை.

திங்கள், 20 நவம்பர், 2017

ஐயப்பன் கோலங்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஐயப்பன் கோலங்கள்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும்.

1641. சமவயது உடையவர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் அதிகம் புரிந்துகொள்ள முடிகிறது.

1642. வெளிச்செல்லவும் உள்வரவும் முடியாமல் முன்னோர்கள் வளர்த்த வேலி முள்ளால் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

1643. ஏன் எதற்கு எப்படி எதனால் - தேவையா இதெல்லாம் என்ற கேள்விகள் சில விஷயங்களில் அடிக்கடி எழுந்தால் அதிலிருந்து விலகி இருப்பது நல்லது.

1644. திருமண விஷயத்தில் முடிவெடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

# மகன் அல்லது மகள் என்று சேர்த்துக் கொள்ளவும்.

1645. பத்ரிக்கையில் மாடல்களின் விளம்பரப் புகைப்படங்களைப் பார்க்கும்போது இப்போதெல்லாம் சாதாரணமாகத் தோன்றுகிறது... ஃபேஸ்புக்கில எத்தனை அற்புதமா ப்ரொஃபைல் பிக்சர் போடுறாங்க.. கொஞ்சம் கத்துக்குங்க ஃபோட்டோகிராஃபர்ஸ்.

மூலையோரமாய் ஒரு சீதை.

ஏமாந்த சிங்கம்
பிடித்ததோ
பசுத்தோல் போர்த்திய
சிங்கம்.

கிணற்று நீரைக்
கலங்க அடிக்கும்
பூனையின் ஊளை.

கபடத்தைப் பாதுகாக்க,
காடுவருவதைத்
தடுக்கும் இராமன்கள்.

ஸரிகமதபத நீ. !

எனக்குத் தேவையில்லை
இந்த யதார்த்தங்கள்

பாறைகளுக்குள்ளே நடந்து
தூரத்துச் சொர்க்கங்களுக்குச் செல்ல
நான் கல் இல்லை
என்னுள் நிகழும்
வேதிவினைக்கு
நானே வினையூக்கியாய்
நானே இரசாயனமாய்

மூட்டை நெல்லாய்
என்னைக் கட்டிப்போடாதே !
இப்போதே உமி நீக்கி
உலைநீரில் கொட்டி
உணவாக்கி உண்.

தபால்காரனும் ரிஷிகுமாரனும்.

உன் கடிதம் பார்த்து
வாசலிலேயே
தவம் கிடக்கும்
கதவாய்
மனசும்

என் எதிர்ப்பார்ப்பைப்
போலத்
தேய்ந்து போகும்
வாசற்படிகள்

உன் கடித வரவிற்காய்
உறுத்து விழித்து
மெல்ல்ல்ல சுவாசித்து
மௌனமாய் அடங்கும்
சமையற்கட்டுச்
சன்னல் கதவு.

உன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.

தெரிந்தவற்றைத்
தெரியப்படுத்து
புரிந்துகொள்ளப்
ப்ரியப்படுகிறேன்.

ஆகாச நிர்மலமாய்
உன் மனசைக் கொட்டு
செடிப்பசுமையாய்ப்
பரந்து விரிந்து ஆக்ரமி
மண்ணாய் நீரை உள்வாங்கு

அறிந்தவற்றை
அறியப்படுத்து
ஆவலாயிருக்கிறேன்
அகத்துள்ளும்
புறத்துள்ளும்.

அசையும் பொழுது.

பகல் தோணி
சூரியத் துடுப்பில்

மரங்கள் மண்ணுடன்
நித்யப் புணர்வில்

குதிரைகள் லாடமில்லாமல்
குளம்படி பதித்து
அவசர ஓட்டம்

இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்.

ஈடு இணையற்ற இளையாற்றங்குடி என்றொரு புத்தகமே வந்திருக்கிறது. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை. இக்கோயில் காரைக்குடியில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கீழச்சீவல்பட்டி ஹைவேஸ் வழியாக இரணியூர் போகும் பாதையில் சென்று அதன் பின் பிரிந்து வரும் பாதையில் செல்லலாம்.

கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் இது. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது.  இங்கே ஒன்பது தீர்த்தம் ஒன்பது கோவில் ஒன்பது விநாயகர் இருப்பதாக என் அத்தை கூறினார்.

ஈசன் கைலாச நாதர், இறைவி நித்யகல்யாணி அம்மை. கோவிலின் பக்கவாட்டில் புஷ்கரணி இருக்கிறது.  எதிரே அங்காளம்மன் கோயிலும் கருப்பர் கோயிலும் பிரம்மாண்டமாய் அமைந்திருக்க பின்புறம் பெருமாள் கோயிலும் உள்ளது.

மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்த ஊர். இவர் இளைப்பாறிய குடி என்பதால் இது இளையாற்றங்குடி என வழங்கப்படுகிறது. இங்கே வேதபாடசாலையும் உள்ளது.
சிதம்பரத்தில் இருந்து - சோழ நாட்டிலிருந்து பாண்டி நாட்டுக்குப் புலம் பெயர்ந்த நகரத்தார் இங்கேதான் முதலில் ஒன்றுகூடினார்கள். பாண்டிய மன்னன் கி பி 707 இல் இக்கோயிலையும் இந்த ஊரையும் அவர்களுக்கு வழங்கினார்.  அதன் பின் ஒன்பது பிரிவாகப் பிரிந்து ஒன்பது கோயிலாக அமைத்துக் கொண்டார்கள். இதுதான் முதல் கோயில். இக்கோயிலைச் சார்ந்தவர்களும் தம்மை எட்டு உட்பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டார்கள்.

இளையாற்றங்குடி பட்டண சாமியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தன் சிரசைக் கொடுத்தற்காக அவர்களுக்குத்தான் பிள்ளையார் நோன்பு முதற்கொண்டு  எல்லா இடங்களிலும் முதல்மரியாதை வழங்கப்படுகிறது.
கைலாய நாதரும் கைலாய விநாயகரும். எல்லாருக்கும் கல்யாண நலம் அருளுவதால் ( சிறப்பான மண வாழ்வு தருவதால் அம்மையின் பெயர் ) நித்ய கல்யாணியம்மன்.

வியாழன், 16 நவம்பர், 2017

பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்பாட்டு.

கல்லூரிகளுக்கிடையேயான கல்சுரல் காம்பெடிஷன்களில் ( INTERCOLLEGIATE CURTURAL COMPETITIONS )  பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் மொத்தமாக 5 போட்டிகளில் பங்குபெற மாணவியர் சென்றோம். நான் தமிழ் வெர்ஸ் ரைட்டிங் ( VERSE WRITING.) -  ஆன் த ஸ்பாட் கவிதை எழுதும்  போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.  இன்னும் சில தோழியரும் ப்ளாக்போர்ட் ட்ராயிங், கார்ட்டூன் ட்ராயிங் , கட்டுரைப் போட்டி போன்றவற்றிற்கு வந்திருந்தார்கள். சென்றவர்களே ஸ்கிட் போன்ற ப்ரோக்ராமிலும் பங்கேற்றோம். அதில் ஒன்று இந்த வில்லுப் பாட்டு. இதில் நாங்கள் எல்லாம் பக்கத்துணையாக அமர்ந்து கதை சொல்பவர் சொல்லிவிட்டு வில்லைத் தட்டும்போது  சீடர்களாகக்  கோரஸாகப் பாடினோம்.

ஆண்கள் மாதிரி தலையைச் சுற்றி மடித்து கிராப் போல அமைந்து வெள்ளை சட்டை வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து அந்த ஆண்கள் கல்லூரியில் ( ஹோ ஹோ என்று ஒரே சத்தம் ) திகிலோடு பாடியது மறக்க முடியாத அனுபவம்.  இதில் என் தோழி கே ஆர் கே கீதாவும் பங்கேற்றதாக ஞாபகம்.

ரயில்வே ஸ்டேஷனில் மதுரையில் இருந்து பாளைசெல்லும் வரையிலும் திரும்பி வரும்போதும் அந்த வில்லையும் குடத்தையும் வைத்துக் கொண்டு இடம் இடமாக அலைந்தோம். அந்த வில் வேறு லேசாகப் பட்டாலே ஜல் ஜல் என்றது வித்யாசமான அனுபவம். :)

எங்களுடன் வந்த மிஸ் நாங்கள் நன்றாகப் பாடினால் நெல்லையின் தொண்டையடைச்சான் உருண்டை/நெஞ்சடைச்சான் பக்கோடா வாங்கித்தருவதாக ப்ராமிஸ் செய்தார். ஹாஹா பின்னர் ட்ரெயின் ஏறும்போது இருட்டுக் கடை அல்வா வாங்கிக் கொடுத்தார். வாழையிலையில் சுருள் போல சூடாக இருந்தது அல்வா. அட்டகாசம்.

இனி நிகழ்ச்சியில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். ( யதேச்சையாக இது பழைய காலேஜ் பேப்பர்களுடன் அகப்பட்டது. :) இல்லாட்டி நீங்க மாட்டிக்கிட்டீங்க. என்ன சொல்றது ஹாஹா :)

(( வில்லுப்பாட்டு ஆறுமுகம்,  அவரது குழுவினர் & மகள் எங்களை மன்னிப்பார்களாக !  ))

கணபதி துதி. ( கோரஸ் )

கணபதியே அருள்வாய் துணை எமக்கு
கணபதியே அருள்வாய்
கதாகாலட்சேபம் செய்ய வந்துள்ளோம் நாங்கள்
கேட்பவர் அனைவரும் ஓடிவிடாமலே.
கணபதியே அருள்வாய்.

கீதா  சீ - 1 :- ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து கழனிவாசல் வழியாக கானாடுகாத்தான் செல்லும் ஹைவேஸ் சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது இக்கோயில். காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். பூவாண்டிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில் வாசலுக்கு முன்பே உள்ள  16 கால்  மண்டபம் இங்கே வித்யாசமான ஒன்று.

கிழக்கு பார்த்த ஐந்து நிலைக் கோபுரம். ஒரு நாள் மாலையில் சென்றபோது கோயில் திறந்திருக்காததால் ( இது மட்டும் ஒன்பது நகரத்தார் கோயில் உலாவின்போது தப்பித்துவிட்டது. இதற்குப் பதிலாக நகரச் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசித்திருந்தோம் ). இன்னொருநாள் காலையில் சென்று தரிசித்தோம்.

ஆரவாரமில்லாத அமைதியான கோயில்கள் அனைத்துமே. ஆறுகாலபூஜையும் நித்யப்படி கட்டளைகளும் குறைவில்லாமல் நடந்துவருகின்றன.
சூரை மரங்கள் நிறைந்திருந்த ஊராதலால் இது சூரைக்குடி என வழங்கப்பட்டிருக்கிறது.

இது சுற்று மதில். இதில் மீனாக்ஷி திருக்கல்யாண சுதைச் சிற்பம் இருக்கிறது.

மிக அழகான பெரிய புஷ்கரணி. இதன் பெயர் பைரவ தீர்த்தம்.  இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

செவ்வாய், 14 நவம்பர், 2017

காரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்.கவிஞர்கள். யா. சாம்ராஜ், அன்பரசன்,  நீ. இரவிச்சந்திரன், கவியரங்கத்தலைவர் கனவுதாசன், கல்யாணி கணேசன், தேனம்மை லெக்ஷ்மணன், மனோ. இளங்கோ. ஆகியோர்.


என் குழந்தைகள் தினக் கவிதை. !!!

என் முதல் பையன் வெங்கட் பிறந்த ஓரிரு வருடங்களில் எழுதியது !
எழுதமுடியும் என்னால்
நன்றாக
எழுதமுடியும்.

முறிந்த மனச்சிறகுகளை
வெட்டிப் போட்டு
புதுச் சிறகு
இணைத்து என்னாலும்
எழுதமுடியும் நிச்சயமாய்.

பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் ? ( கவியரங்கக் கவிதை )

பாரதி இன்று வந்தால். இன்றையக் கல்வி பற்றி என்ன சொல்லி இருப்பார்.?

தமிழ்த்தாய் வாழ்த்து.

தீஞ்சுவைப் பாலெடுத்து 
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் 

புளிக்குதென்பேன்.,
தமிழ்த்தாயிடம் மதலை நான் 

தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு 

என்னை வளர்த்த காரணத்தால் 
அவள்தாளில் தெண்டனிட்டேன்.
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்.

காரைமாநகர் வாழ்த்து:-

காரைக்கட்டிடங்கள் செறிந்திருக்கும் காரைக்குடி
கல்விக்குடியானது கொடைவள்ளலின் விடாமுயற்சியால்
கல்விக்கோட்டை கட்டி ஞாலம் புகழவைத்த
வள்ளலின் அழகூருக்கு வற்றாத வணக்கங்கள்.

திங்கள், 13 நவம்பர், 2017

ஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். !

மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறையில் என்னைப் புதுப்பித்த இருவர் சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா. புதுக்கவிதை பற்றிய அசைன்மெண்டை கவிதையாகவே எழுதிக் கொடுத்ததால் ஐந்துக்கு நாலே முக்கால் மதிப்பெண்கள் கொடுத்தவர்.

இவர்கள் இருவரும் கொடுத்த ஊக்கத்தாலேயே நான் ரசயானம் படித்தாலும் தமிழை நேசித்தேன். தமிழ் கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டேன்.

இனி ஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷன்.

துடைப்பம் பற்றிய கவிதை, அதன் எடுப்பு முடிப்பு எல்லாமே நன்று.

சஜஷன்.

பொருள் பற்றிய சிந்தனையில் தானாய் வரும் படிமங்களோடு வேறு சில படிமங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கவிதையில் அவை ஒட்டாமல் தனியே இருக்கின்றன. கவிதை நீளமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
” ஆண்டவரே, என் இறைவனே, வியத்தகு செயல்கள் பல நீர் செய்தீர் :எங்கள்பால் உமக்குள்ள எண்ணங்களில் உமக்கு நிகர் எவருமில்லை. அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணில் அடங்கா “ - சங் 39 :5.

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

நாங்கள் கல்லூரிப் பருவத்தில் கொண்டு வந்த கையெழுத்துப் பத்ரிக்கை புரவி  ( PEGASUS ).

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக் கடிதம்.

புரவிப் படைப்பாளிகட்கு,

புரவியின் பாய்ச்சலை ஒரே மூச்சில் ரசித்துவிட்டு, ரசனையின் சூடு ஆறுமுன் இதை எழுதுகிறேன்.

“சின்னஞ்சிறு கதைகள் பேசி” உழலும் மனித மந்தையரிடையே புரவிக் கூட்டம், அபூர்வமாய் மொட்டுவிட்டிருக்கும் ஒரு குறிஞ்சி மலர்க்கூட்டம் ! பேசிவிட்டுப் பிரியாமல் செயல் வடிவம் கொடுக்க முனைந்தமைக்கு முதற் பாராட்டுக்கள் !

எங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.

ஒவ்வொரு தோழிகளுக்குள்ளும் பேசிக்கொள்ள ஏகப்பட்டது இருக்கும்போது கல்லூரிப் பருவத்தில்  நான் என் தோழிகள் ( ஆங்கில இலக்கியம் - மீனாக்ஷி, கே ஆர்கே கீதா ) ஆகியோர் இலக்கியம் பற்றியும் நாங்கள் நடத்திவந்த புரவி - பெகாஸஸ் ( PEGASUS )   என்ற இதழ் பற்றியும் கடிதங்களில் பேசி இருக்கிறோம். அலையலையாய்ப் பறக்கும் பிடரியுடன் கூடிய நல்ல கம்பீரமான பறக்கும் குதிரை அட்டையை அலங்கரிக்கும். 5 முதல் 10 இதழ் வந்திருக்கலாம்.

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதமும் இருக்கிறது. மிக அருமையான எழுத்து மீனாவுடையது. அவள் எழுதிய மூன்று கடிதங்களில் புரவி பற்றியும் அவளின் எழுத்தாற்றல் தெரிவதற்காக இன்னும் கொஞ்சமும் கொடுத்திருக்கிறேன் .

புரவியில் கடிவாளம் என்ற தலையங்கம் எழுதியது இவள்தான். அவள்தான் புரவியின் எடிட்டர் . இவளின் கடிவாளம் சாட்டையடியாக இருக்கும். பாலசந்தர் எங்க ஊர் கண்ணகி என்று படம் எடுத்த பிறகு காலத்துக்கேற்ப மாறும் பச்சோந்திகள் என்று அவரின் படங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு விளாசியவள்.   இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இன்று சாட்டர்டே போஸ்டுக்கு எழுதிக்கொடு என்றால் கூட எழுத மாட்டேன் என்கிறாள்.

ஹ்ம்ம் புரவியைத் திரும்பக் கொண்டுவரலாமா என்ற எண்ணம் அவ்வப்போது எழுகிறது. அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும். பார்க்கலாம்.

மீனாவின் 3 கடிதங்களிலும் கே ஆர் கே கீதாவின் கடிதங்களிலும் எவ்வளவு சுவாரசியம்.

இது கே ஆர் கே கீதாவின் கடிதம். அதை முதலில் கொடுக்கிறேன்.

கே ஆர் கே கீதா :-WHEN ARE YOU COMING TO MADURAI ? OR YOU 'VE DECIDED NOT TO SHOW HEAD OR TAIL IN MDU ?

ஞாயிறு, 12 நவம்பர், 2017

நான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.

கல்லூரியில் படிக்கும்போது பாடம் நல்லா எழுதுறமோ இல்லையோ படம்நல்லாப் போடுவேன். தினம் ரெக்கார்ட் நோட் வரையிறதையே ப்ளஸ்டூவில் இருந்து காலேஜ் வரை ஒரு தவம் மாதிரிப் பண்ணிட்டு இருந்தேன்.

முதல் இரண்டு வருடம் பிஸிக்கிஸ் ஆன்சில்லரி. மூன்றாம் வருடம் ஸூவாலஜி. அதே போல் முதல் இரண்டு வருடம் மொழிப்பாடங்கள் உண்டு. தமிழ் & ஆங்கிலம். மூன்றாம் வருடம் மேஜர் சப்ஜெக்ட்ஸ் மட்டும்தான்.

இந்தப் படம் THE SECRET OF WORK BY VIVEKANANDA என்ற ஒரு  ஆங்கில அசைன்மெண்டுக்காக வரைந்தது. மிஸ் இதுக்காக நாலரை மதிப்பெண் கொடுத்திருக்காங்க. :)

மணியம் செல்வன், கோபுலு, ராமு, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, ஜெயராஜ், மாருதி என்று எனக்குப் பிடித்த ஓவியர்கள் அதிகம். இவர்களின் பாணியை வைத்தே சொல்லிவிடலாம்.  மசெவின் நாயகிகள் ஆங்கில வனிதைகளாகவும் ஜொலிப்பார்கள். திட்டமான எல் போன்ற மூக்கும் நேர்க்கோடுகளும் இவர் ஸ்பெஷல். சொஃபிஸ்டிகேடட் & ரிச் லுக் இருக்கும் இவரது ஓவியங்களில். மேன்மக்களைப் போல இருப்பார்கள் அனைவருமே.

கோபுலு அதிகம் நாடகம், சிறுகதைகளில் மனிதர்களின் செழிப்பான உருவத்தையும் நல்ல கிளி போன்ற மூக்கையும் வரைவார். தீர்க்கமான ஓவியங்கள். சமூகத் தொடர்களில் இவரது ஓவியம் பரிச்சயம்.

ராமுவின் ஓவியங்கள் சுருட்டைக் கேசம் போல் சுருண்டு சுருண்டு இருக்கும் . அந்த ஒவ்வொரு சுருளும் வெகு அழகாக வந்து மனதிற்குள் ஒரு உருவைப் படைப்பது அற்புதம். அக உணர்வைப் படைக்கும் ஓவியங்கள். வெகு தீவிரமான ஓவியமொழி இவருடையது.

ஆதிமூலம் ஓவியத்தில் முகத்தின் நிழல்களும் பேசும். !. கோட்டுச்சித்திரபாணி இவருடையது. வெகு சிக்கலானது . சில சமயம் கறுப்பு வெள்ளைப்  புகைப்படங்கள் போன்றது.

ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியம் கம்பீரமானது. ஒன்றில் ஒன்றைக் கொண்ட இரட்டை ஓவியங்களாக இருக்கும். மனிதர்களும் பொருட்களும் கலந்து கட்டி நம்மை அக்கதையின் கருவை தீவிரமாக உணரவைப்பார்கள். சாட்டையை வீசியது மாதிரி  ஒரு அடர் மொழி கொண்டது இவரின் ஓவியங்கள்.

ஜெயராஜ் கேட்கவே வேண்டாம் ஓவிய உலக பிரம்மா. பெண்களையும் ஆண்களையும் செக்ஸியாகப் படைத்து உலவ விடுபவர். சுஜாதா கதைகள் என்றால் இவர் படம்தான் ஞாபகம் வரும். அபாரமான , அபாயகரமான சடன் ஸ்ட்ரோக்குகள் இவரின் ஸ்பெஷாலிட்டி.

மாருதி காவியக் காரிகைகளைப் படைத்துக் காதலிக்க வைப்பவர். இவரின் நாயகிகள் சுருட்டைக் கேசமும், அழகிய இதழ்களும் காந்தப் பார்வையும்  கொண்டு காதலிக்க வைப்பவர்கள். இவரது ஓவியங்களைப் பார்க்கும்போது தண்ணென்ற குளிர்ச்சி பரவும்.  இவர்கள் அனைவருமே என் ஆசான்கள். நான் ஒரு பத்துப்பன்னிரெண்டு படம்தான் வரைந்திருப்பேன். அதுவும் மூன்று நான்கு மணி நேரம் எடுக்கும். ரப்பர் எல்லாம் போட்டு அழிப்பதுண்டு :) எடுத்தவுடன் மெல்லிசாக அவுட்லைன் போட்டுப் பின் வரைவேன். பென்சிலாலும், பேனாவாலும் இண்டியன் இங்காலும் ( பேனாவில் தொட்டு ) வரைந்ததுண்டு. முன்பு கூட நான் கலந்துகொண்ட காம்பெடிஷன்களின் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களைப் போட்டிருந்தேன்.

இந்த ஓவியப்  பெண் மண்டி போட்டிருக்கும் பொஸிஷன் சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது . அதேபோல் டிசைன் சங்குபோல் அல்லது குட்டிக் கொம்பு போல் ( கொம்பூதுதல் )  ஒன்றை வரைந்துள்ளேன். சங்கு இப்படி இருக்குமா தெரியல. :) தலையிலிருந்து விழும் சல்லாத்துணி ரொம்பப் பிடித்தது.
இது யாரோ வரைந்ததை பத்ரிக்கையில் பார்த்து வரைந்திருப்பேன் என நினைக்கிறேன். ஹாஸ்டலில் இருக்கும்போது ஓவியக்காரி என நினைத்துப் பார்த்த வெட்டி வேலைகள் இப்போது ப்லாக் போஸ்டாக உதவுகின்றன. :)

வெள்ளி, 10 நவம்பர், 2017

காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.
பாரதியார் காரைக்குடிக்கு வந்த நாளைக் ( நவம்பர் 9 ) கொண்டாடும் பொருட்டு காரைக்குடி பாரதி தமிழ்க்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

புதன், 8 நவம்பர், 2017

என் சிர்க்கோனியம் பல்லே. !

முன்னே எல்லாம் சொத்தைப் பல் என்றால் பிடுங்கிவிடுவார்கள் டாக்டர்கள். இல்லாவிட்டார் தங்கப்பல் கட்டி விடுவார்கள்.  என் சொந்தக்காரர்களில் ஓரிருவர் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கப் பல்லே பிரதானமாய் நினைவில் பளீரிடும். ! இப்போது எல்லாம்  சொத்தை( யை) எடுத்துவிட்டுப் பூசி மெழுகி விடுகிறார்கள். அதன் மேல் சிர்க்கோனியம் பல்லை டூத் பிக் போன்ற மரக்குச்சிகளால் சொருகிவிடுகிறார்கள்.
இங்கே காண்பவை அனைத்தும் மாடல் பற்களே. என்னுடையவை அல்ல. கடைசியா கொடுத்திருக்கேன் என்னோட சிர்க்கோனியம் பல்லை ! :)

செவ்வாய், 7 நவம்பர், 2017

காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

871. ஒக்கிடுதல். - சீர் செய்தல். உடைந்த ஒரு பொருளை ரிப்பேர் செய்து வைத்துக் கொள்ளுதல். வீட்டை ஒக்கிட்டு வைத்துக் கொள்வது .

872.மரவுதட்டி/மறைவுதட்டி. :- மறைப்புக்காகப் பயன்படுவது. மரச்சட்டங்களால் ஆனது. முழுவதும் மரத்தால் ஆன மரவுதட்டியும்  உண்டு. சிலவற்றில்  ஸ்கிரீன் போடப்பட்டிருக்கும்.  ஒரே சதுரமாகவோ அல்லது இரட்டைச் சதுரங்களாகவோ மரச்சட்டங்களால் செய்யப்பட்டிருக்கும். கீழே கால் வைக்கப்பட்டிருக்கும். இச்சட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உருட்டு ஆணிகளில் ஸ்க்ரீனை மாட்டி உபயோகிக்கலாம். பொதுவாக ஆல்வீட்டில் அல்லது வளவில் அல்லது அடுப்படியில் ஒருவர் பங்கிலிருந்து மற்றவர் பங்கை மறைக்கப் பயன்படுத்துவது.

873. உள்ளதைப் போல :-சுமாராக. பெண் எப்படி இருப்பாள் என்று கேட்டால்  அது ரொம்ப உள்ளதைப் போல இருக்கும்.  என்பார்கள்.  திருத்தம் பத்தாது, அழகு போதாது என்பது அவர்கள் கணிப்பு.

874.புரியாதவளும் பொல்லாதவளும்.. :- ”பொல்லாதவளோட கூட இருந்துறலாம். அடி இந்தப் புரியாதவளோட இருக்க முடியாது” என்பது சொலவடை.

875.கசம் பிடிச்சவ :- மகா, மெகா சிக்கனக்காரி. எச்சில் கையால் காக்காய்கூட ஓட்ட மாட்டாள் என்று அர்த்தம்.

திங்கள், 6 நவம்பர், 2017

ஆண்டுமுழுக்கப் போட அழகுக் கோலங்கள்.

சித்திரையில் இருந்து பங்குனி வரை போட 12 கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியாகி உள்ளன.

ஞாயிறு, 5 நவம்பர், 2017

சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

குழந்தைகள் கைக்குழந்தைகளாய் இருந்தபோது இன்னதென்று தெரியாத வலியினால் அழத்துவங்குவார்கள்.

அப்போதெல்லாம் ஸ்பாஸ்மிண்டான் ட்ராப்ஸ் கொடுப்பதுண்டு. அதைக் கொடுத்ததும் பிள்ளைகள் சமத்தாகத் தூங்கிவிடுவார்கள்.

அதனை ஒரு முறை சுவைத்துப் பார்த்தபோது நாங்கள் வைக்கும் சூப்பின் சுவையில் இருந்தது. அதிலிருந்து அதற்குப் பதில் குழைவாய் வடித்த சாதத்தில் சூப் போட்டு குழந்தைகளுக்கு ஊட்டுவதுண்டு.

பொதுவாக வயிற்றுக் கோளாறுகளால் பிள்ளைகள் அழலாம். மலச்சிக்கல் காரணமாக டாய்லெட் சரியாகப் போகாமல் இருப்பது., வயிற்றில் இறுக்கமாக உணர்வது, அல்லது பிரளி போன்ற வயிற்றுப் பொருமல் அல்லது கடுப்பு நோய் இருப்பது காரணமாக இருக்கும்

இந்த சூப் வகைகளில் பட்டை கிராம்பு ஏலக்காய், போட்டுத் தாளிப்பதால் அவை டெம்பரரி பெயின் ரிலீவர் போல செயல்படுகின்றன. சில சூப்புகளில் சோம்பு, கசகசா போன்றவற்றை வறுத்து அரைத்து விடுவார்கள். பொதுவாக  மேற்கூறியவற்றுடன் வேகவைத்த  துவரம்பருப்பு   + பாசிப்பருப்பு, பெரியவெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை, மஞ்சள்தூள்  கொண்டு தயாரிக்கப்படுவது சூப். 

ரசத்தில் மிளகு சீரகம், பூண்டு போன்றவையுடன் தக்காளி, புளி, பருப்புத் தண்ணீர் போன்றவை சேர்க்கப்படும். இதில் கருவேப்பிலை கொத்துமல்லி வரமிளகாய் போடுவதுண்டு.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏன் நமக்குமே கூட இந்த மழை நேரத்தில் செய்து சுடச் சுட அருந்த சில எளிய சூப்ஸ் & ரசம் வகைகள் இங்கே அணிவகுக்கின்றன. இவற்றை எந்த நேரத்திலும் அருந்தலாம். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம் என்பது சிறப்பு.

இது தக்காளி ரசம். புத்துணர்ச்சி அளிக்கும்.
இது மட்டன்  ஈரல் கொழுப்பு சூப்.  இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வாய்ப்புண், குடல் புண்  உள்ளவர்களுக்கும் நல்லது. சக்தி கொடுக்கும்.

சனி, 4 நவம்பர், 2017

பறவைகள் மை க்ளிக்ஸ். BIRDS. MY CLICKS.

மயிலு :) அறுபடை முருகன் கோயில்கள் செல்லும் வழியெங்கும் மயில்களைத் தரிசித்தோம். அழகு ஆண்மயில்கள்.
ஆண்மயிலுக்குத் தோகை உண்டு. ( நீளமாக இருக்கும் )

காதல் வனம் :- பாகம் 12. ஸ்கூபா டைவிங்

காதல் வனம் :- பாகம் 12. ஸ்கூபா டைவிங்

”மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச.. தேகம் பூத்ததோ.. ஓ மோகம் வந்ததோ… மோகம் வந்ததும் மௌனம் வந்ததோ.. தென்றலே பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது.. ” என்று பானுப்பிரியா தன் அழகான கூந்தல் கற்றைகள் முகத்தில் விழ கவர்ச்சிகரமாகப் பாடிக் கொண்டிருந்தார்.

சேனலை மாத்திய மஹாராணி ட்ராவல் & லிவிங் சேனலில் ஸ்கூபா டைவிங்கைப் பார்த்ததும் குதூகலித்தாள். பச்சையும் நீலமும் கலந்த மாலத்தீவு, சிறிது சாம்பலும் கலந்த அந்தமான், அடர் பச்சை நிற சென்னை கோவளம் என லிஸ்ட் போட்டு ஸ்கூபா டைவிங்க் போட்டிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

கடல் ஒரு நீலத்தாமரை மாதிரி மலர்ந்து அவளை அழைத்துக் கொண்டிருந்தது. கருப்பு உடை உடுத்திய வண்டுபோல அதில் துளைந்துகொண்டிருந்தாள் ராணி. மெல்ல மெல்ல பவளப்பாறைகளின் முடிச்சுகளின் மேலாக ஒரு தேனீயைப் போல வட்டமிட்டு வளைந்து நெளிந்து கொண்டிருந்தாள்.

வியாழன், 2 நவம்பர், 2017

வாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா.

வாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா.

துப்பாக்கியோ அதிக அளவு துருப்புக்களோ இல்லாமல் 21 வயதிலேயே வயநாட்டின் புரலிமலையிலிருந்து கொரில்லா யுத்த முறைகளால் மைசூர்ப் படையினரையும் ஆங்கிலேயரையும் சிதறடித்தவர் பழசி ராஜா. “ஆயிரம் வீரர்களோடு நாம் போராடவில்லை. பழசிராஜா என்ற ஒரே ஒரு வீரருடன் மட்டுமே நமது போர் .இவரின் முடிவே புரட்சியின் முடிவாக இருக்கும்” என்று சொன்னவர் மேஜர் ஜெனரல் வெல்லஸ்லி.

புதன், 1 நவம்பர், 2017

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 5

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 5 :-

”இந்த டாய்ஸை என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டணும். இன்னிக்கு ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு எடுத்திட்டுப் போறேம்மா “ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் ஆதித்யா.

எப்போதும் அவனுடன் எதற்காவது சண்டை போடும் ஆராதனாவும் ”ஆமாம் அம்மா எடுத்துப்போறோம் ” என்று ஒத்தூதினாள்.

பாட்டரி போட்டால் பறக்கும் சிறிய சைஸ் ரிமோட் பொம்மை விமானம் ஒன்றை அவனுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவனது தாய்மாமா கண்ணன் பரிசளித்திருந்தார்.

சனிக்கிழமை கையில் கிடைத்ததால் இருநாட்கள் அதை ஓட்டி அவனும் ஆராதனாவும் பொழுதைக் கழித்திருந்தார்கள். அந்த விமானத்தின் மீதுள்ள ஆசை இன்னும் வடியாததால் அவர்களுக்குப் பள்ளி செல்லவே விருப்பம் இல்லை.

“அதெல்லாம் கொண்டு போறதில்லை. அங்கே கொண்டுபோனா ஒடைச்சிருவீங்க. ரொம்ப காஸ்ட்லி அது. வீட்ல வைச்சிட்டு ஸ்கூலுக்குக் கிளம்புங்க “ என்று கோபித்துக் கொண்டாள் அவர்கள் அம்மா ரம்யா.

மெர்சலும் துப்புக்காரர்களும்.

1621. Ore mercelathan keethu. 😂


1622. உக்கிரமான சாமியை எல்லாம் பாஸ்வேர்டா வைச்சா எந்த உக்கிரம் எந்த ஐடிக்குன்னு மறந்துபோகுது. இந்த ஐடில இந்த லாப்டாப்புல இன்ன தேதிலதானே பாஸ்வேர்ட் மாத்தினேன்னு காமிக்கிறது என்ன பாஸ்வேர்டுன்னும் காமிக்கலாம்ல.  :P 

1623. நாம டிம் டிப் செய்தாலும் எதிர்க்க வர்றவங்க நம்ம கண்ணை குருடாக்கிடுறாங்களே. இந்த பஸ் , லாரி கூட பரவாயில்லை. வேன்., கார்க்காரங்களுக்கு கர்ட்டஸின்னா என்னன்னு லைசென்ஸ் கொடுக்கும்போதே க்ளாஸ் எடுக்கணும். 

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அசடன் – ஒரு பார்வை.

அசடன் – ஒரு பார்வை.


மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சிக்கும்போது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதா அல்லது நூலை விமர்சிப்பதா என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏனெனில் மொழிபெயர்ப்பை விமர்சிக்க அது பற்றி வெவ்வேறு மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே வெவ்வேறு ஆசிரியர்களாலோ எழுதப்பட்டதை வாசித்திருக்க வேண்டும். நூலை விமர்சிக்கும்போது அந்நூலின் மூலக்கதை ஆசிரியர் எழுதிய காலகட்டத்தை ஒட்டியும் தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருந்தால் அது அவர் எழுதியதோ என்னும் இலக்கியமயக்கம் நம்மை ஆட்கொண்டுவிடும்.

திங்கள், 30 அக்டோபர், 2017

ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

ஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை,
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும், வித்தை வரும்
உத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்.
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு அதன் துணையாலே 
சுகம் கூடும் தொடர்ந்து
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதையும் தொடங்கு.

ஸ்ரீ மஹா கணபதிம். 
இவர் சூரியனார் கோவில் அல்லது கஞ்சனூர் கோவிலின் முன்பு தனிக்கோயிலாகக்  குடி கொண்டவர்.

தூத்துக்குடி ராமநாதபுரம் உப்பளங்கள்.

”உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பதும் ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பதும் பழமொழி. !

நெய்தல் நிலத்துக்கே உரிய ஒரு தொழில் உப்பு விளைவித்தல். அந்தக் காலத்தில் பண்டமாற்று முறைக்கும் உதவிய ஒரு பொருள் உப்பு. களர்நிலம், உவர்நிலம் என்று உப்பு விளைவிக்கப்படும் பூமி அழைக்கப்படுகிறது. உப்பு அளம் என்றும் கோவளம், பேரளம் என்று கடற்கரைக் கிராமங்களில் பெயர் அமைந்திருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டு.

உப்பு விற்றவர்களை உமணர்கள் என்று பண்டைஇலக்கியக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கழுதைகளின் முதுகில் உப்பை மூட்டையாகக் கட்டிச் சென்று விற்பவர்களை  உப்புக் குறவர்கள் என்று கூறுவதும் உண்டு.

உப்புப் பெருகுவதுபோல் பணம் பெருகும் என்பதால் உப்பை பூஜை அறையில் வைத்து வணங்குவோரும் உண்டு. உப்பு என்பது பணத்துக்குச்/தனத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

உப்பு என்றதும்  காந்தியடிகளின் தண்டி யாத்திரையும் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகமும் நினைவுக்கு வரலாம். 

உணவு வகைகளில் (தற்காலத்தில் உப்பு சேர்க்காவிடினும்) இயற்கையாகவே சில காய்கறிகளில் உப்புச் சத்துகள் உறைந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உப்பில் அயோடின் இருக்கவேண்டும் என்பதற்காகவே கல் உப்பின் பயன்பாடு (  சுத்திகரிக்கப்படாத  கடல் உப்பு ) வலியுறுத்தப்படுகிறது. டேபிள் சால்ட் எனப்படும் நைஸ் உப்பு/தூள் உப்பு/ பொடி உப்பில் இந்த அயோடின் கொண்டது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்போது இதில் இயற்கையாக இருக்கும் அயோடின் என்னாச்சு ?

ராக்சால்ட், இந்துப்பு, ப்ளாக்சால்ட்,  சைனீஸ் சால்ட் எனப்படுபவை, பாறையில் இருந்து கிடைப்பவை, நாம் உபயோகப்படும் கல் உப்பே கடலில் இருந்து கிடைக்கும் உப்பாகும்.

இவை தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும்வழியில் அமைந்த உப்பளங்கள்.

கடற்கரை அருகில் உள்ள நிலங்களை வயல் பாத்திகள் போலப் பிரித்து அதில் கடல் நீர் கொட்டப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.

நால்வரும் நடுத்தம்பியும் வெள்ளைக்காரத் தம்பதியினரும்.

காரைக்குடியில் இறைப்பணி ஆற்றிவரும் திருநாவுக்கரசர் நற்பணி மன்றத்தினர் பல வருடங்களாக திருவாசக முற்றோதல் செய்து வருகிறார்கள். இல்லம் செழிக்கவும், நிம்மதி நிலைபெறவும், நன்மை ஓங்கவும் இம்முற்றோதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

திருமணம், சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் , புதுமனை புகுவோர் ஆகிய சுபநிகழ்வுகளிலும் இம்முற்றோதல் செய்கிறார்கள். மேலும் கோயில்களிலும் திருவாசகம் பாடப்படுகின்றது.

இதில் பன்னிரு திருமுறைகளுடன் எட்டாம் திருமுறையில் உள்ள  ”திருவாசகமும்” முழுமையாக ஓதப்படுகிறது. சந்த நயத்தோடு கூடிய இப்பாடல்களை செவிமடுத்தாலே யாக்கை நிலையாமை பற்றிய தெளிவும் பேரின்பப் பரம்பொருளைப் பற்றும் அவாவும் தோன்றும். 
நால்வரின் புகைப்படத்தைத் தாங்கி நிற்பவர் என்னுடைய நடுச்சகோதரர் வள்ளியப்பன் என்ற பாபு என்ற சேவுகன்செட்டி. இவர் தற்போது இல்லை. 2013 ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சிவபதவி அடைந்துவிட்டார். ஆகையால் இப்படம் எனக்கு முக்கியமான ஒன்றாகிறது.

உலாவந்த காசி ஈசன்.

காசியிலிருந்து உலா வந்த 400 கிராம் ( 3 1/2 கிலோ தங்கத்திலாலான ) சொர்ணலிங்கேஸ்வரரைப் பற்றி முன்பே ஒரு இடுகை வெளியிட்டிருக்கிறேன். மானகிரிக்கு வந்திருந்தபோது அங்கே சென்று எடுத்த இன்னும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

காசி நகர சத்திரத்தில் சொர்ணத்திலாலான விசாலாக்ஷி சமேதராய் 2011 இல் இருந்து காட்சி அளிக்கிறார் சொர்ணலிங்கேஸ்வரர்.

இங்கே சம்போ பூஜை பிரசித்தம். தீபாவளிஅன்று லட்டுத் திருவிழா காண கூட்டம் அலைமோதும். இங்கே இறந்தால் முக்தி என்பதால் இந்தச் சத்திரத்துக்குச் சென்று  (ஆன்மவிடுதலை அடைய எண்ணி)  முதியவயதினர் சிலர் பல்லாண்டுகளாகத் தங்குவதும் உண்டு.

பக்கத்திலேயே காசி விசுவநாதர் கோயிலும் தஸஸ்வமேத யாகக் கட்டமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

76 நகரத்தார் ஊர்களுக்கும் 9 நகரத்தார் கோயில்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அன்னப்பறவை - ஒரு பார்வை.

குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா, செல்லகணபதி வரிசையில் நான் விரும்பி வாசித்த குழந்தைக் கவிதைகள் பாலசுப்ரமண்யன் அவர்களது கவிதைகள். இவரது ஆறாவது அல்லது ஏழாவது தொகுப்பாக இந்நூல் இருக்கவேண்டும். நடைவண்டி , வெள்ளைத் திமிர் போன்ற ஐந்து நூல்கள் முன்பே படித்திருக்கிறேன். அவற்றில் ஒன்று ஹைக்கூ தொகுப்பு என்றும் ஞாபகம்.

பாண்டிச்சேரியில் வசித்துவரும் பொறியாளரான இவர் கவிதைகள் குழந்தைகளுக்கு அறிவியல் அறிவு, தமிழ்ப்பற்று, தேசப்பற்று, தலைவர்களின் மேல் அபிமானம் , இயற்கை, விலங்குகள், பறவைகள்  பற்றிய நேசம் ஆகியவற்றை உருவாக்கக் கூடியவை.

இந்நூலில் அட்டைப்படம் வெகு அழகு. இதை வரைந்தவர் ஓவியர் இரா அன்பழகன். அன்று நாம் விளையாடிய அன்னப்பறவை ( ஆடுகுதிரை டைப் விளையாட்டுச் சாதனத்தில் ) யில் இரு குழந்தைகள் ஆடி மகிழ்வது அழகு. சாகித்ய அகாதெமி விருதாளர் ம. இலெ. தங்கப்பா அவர்கள் அணிந்துரை நல்கியுள்ளார்கள். கோனேரி பா. இராமசாமி வாழ்த்துரை அளித்துள்ளார்.

இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும் - ஒரு பார்வை.

கல்லூரிப் பருவத்திலும் கல்யாணப் பருவத்திலும் கொடுக்கப்பட்ட நூல்களை இப்போதுதான் முழுமையாக வாசிக்கிறேன். அவற்றில் ஒன்று இரா வேலுச்சாமியின் மறுபடியும் பூக்கும்.  1981 களில் வந்த கவிதைகள். இன்றைய காலகட்டத்தில்  இவற்றில் சில சாதாரணத் தன்மையோடு இருந்தாலும் பெரும்பாலானவை அன்றே துணிச்சலாக எழுத்தப்பட்டவை என்பது என்னைக் கவர்ந்தது.
லீவ்ஸ் ஆஃப் ஐவிக்கு  அதிகம் ஆர்ட்டிகிள் கொடுத்ததுக்காக கிடைச்ச பரிசு.
இரா வேலுச்சாமியின் இத்தொகுப்பு பற்றி பல்வேறு பிரபலங்கள்  கருத்துகள் கூறி இருக்கிறார்கள். மேத்தா, சேவற்கொடியோன், வலம்புரி ஜான், ஜெயதேவன், துவாரகா, கிருஷ்ணன் பாலா, திருநாவுக்கரசு, வண்ணமுத்து, சிவசங்கரன், டாக்டர் இரா. மோகன் ஆகியோர். இதில் இரா மோகனின் முன்னுரை அழுத்தமாக இருந்தது.

காகிதச் சங்கிலிகள். - ஒரு பார்வை.

நேற்று பழைய புத்தக அலமாரியை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது சுஜாதாவின் புத்தகம் கையில் சிக்கியது.  முகநூல் சகோ கல்யாண்குமார் சொல்லியபடி நம் பால்யத்தில் படித்த (கல்லூரிப்பருவத்தில் ) எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும் என்ற அவாவில் இந்த இடுகை போட்டிருக்கிறேன். :)

அநேகமாக தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த எழுத்தாளர் சுஜாதா. ரங்கராஜனாகிய அவர் தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதி வந்தார். சட்டென விஷயங்களைக் கடத்தும் எழுத்து அவருடையது. இவருடைய கணேஷ் வசந்த் இல்லாத தொகுப்பு இது. இத்தொகுப்பில் நான்கு கதைகள் இடம்பெறுகின்றன.

வியாழன், 26 அக்டோபர், 2017

மருதமலை முருகன் கோயில்.

மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா நீயா

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
தேவன் மகனோடு மனம் விட்டுப் பேசிப்பாருங்க
தீராத வினையெல்லாம் தீர்ந்துபோகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க.

என்ற இரு பாடல்களும் பள்ளிப்பருவத்தில் விரும்பிக் கேட்டவை. .

கோயமுத்தூர் சென்றால் மறக்காமல் தரிசிக்கும் இடங்களில் முதன்மையானது மருதமலை. கோவை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த வழியில்தான் வடவள்ளி, அக்ரி காலேஜ் ஆகியன அமைந்துள்ளன. கோயிலுக்கு அருகில் காலேஜ் இருப்பதால் இளவட்டங்கள் குன்றிலிருக்கும் குமரனைச் சுற்றுவார்கள்.

வல்லக்கோட்டை முருகன் கோயில்

சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோயில் . திருத்தணி செல்லும்  முன் இங்கே சென்று வணங்கிவிட்டுத்தான் சென்றோம் . அழகன் முருகன் ஆறடி உயரத்துக்கும் மேலே ( ஏழடி உயரம் என்கிறார்கள். ). வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியனாக அழகுற நின்று அருள்பாலிக்கிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்கிறார்கள்.
அங்கே வேல் மட்டுமல்ல மயில்களும் கண்டோம். ஒன்றல்ல பல.

புதன், 25 அக்டோபர், 2017

காரைக்குடியில் ஸ்கந்தர்சஷ்டி விழாவும் திருப்புகழ் பாராயணமும்.

கடந்த ஆறு நாட்களாக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் ஸ்கந்தர்சஷ்டி விழா நடைபெற்றது. முதல் நாள் திருமதி பாலாம்பாள் ஆச்சி அவர்கள் ஸ்கந்தபுராணம் படித்தார்கள். 
அதன் பின் காரைக்குடி திருவாசகம் முற்றோதல் குழுவின் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. இவர்களைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செய்து சிறப்பித்தார்கள்.

ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

......... பாடல் .........

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

---- ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 

மகாபலிபுரம் சிற்பங்களால் நிரம்பியது. ஐந்து ரதம் போகும் வழியில் பல்வேறு கடைகளிலும் காணக்கிடைத்த சிற்பங்களில் நம்ம புள்ளையாரும் :) மாக்கல், மார்பிள் என்று விதம் விதமான பிள்ளையார்கள் காணக்கிடைத்தார்கள்.

ஷிர்டி சாய்  பாபாவும் பிள்ளையாரும்.

இன்னும் சில மரச்சிற்பங்கள்.

உறவினர் ஒருவர் வீட்டில் கதவின் கைப்பிடியை சுற்றி வித்யாசமாக அமைந்திருந்த மரவேலைப்பாடு. பூக்கள் இலைகள் வளைவுகளை  சிற்பம்போல் எப்படி இப்படி நுண்ணியமாக செதுக்க முடிந்தது எனத் தெரியவில்லை. அதன் பக்கமே சாவிக்கான துவாரமும் செதுக்கப்பட்டிருக்கிறது !

வார்ப்பிரும்பில் செய்யப்பட்டு சில்வர் வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும் கைப்பிடியின்  கொண்டியிலும் எத்தனை நெளிவு சுளிவுகள்.

பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

பூக்கள்  மனம் குளிர்விப்பவை. (அழகு) கொஞ்ச(சு)ம் பூக்கள் பார்த்து மனதை இலகுவாக்குவோம்.
இதுஅந்தி மந்தாரை. மஞ்சள் அந்திமந்தாரை.

சிவன் கோலங்கள்.

சிவனுக்குரிய சிறப்புக் கோலங்கள்.

இந்தக் கோலங்கள் 2. 11. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ‘’

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்திய நதிநீர் இணைப்பு.

எத்தனை நதிகள் எத்தனை நதிகள்
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.

ஆகலாம் அப்துல்கலாம்.

அக்கினிச்சிறகுகள் கொண்டு
கனவுகளைச் செதுக்கு
ஆகலாம் அப்துல்கலாம்.

உயரவேண்டுமென்ற உத்வேகம்
குறிக்கோளில் பிடிவாதம் கொள்
ஆகலாம் அப்துல்கலாம்.

சாதாரண மனிதனிலிருந்து
அசாதரணாய் வெளிப்படு
ஆகலாம் அப்துல்கலாம்.

விவசாயம் காப்போம்.

வேரில் கொஞ்சம் வெப்பம் பிண்ணாக்கு
தூரில் கொஞ்சம் தோட்டச் சருகுகுகள்.
மாட்டுச் சாணம் மண்புழுக் கழிவுகள்.
மக்கிய தழைகள் மகசூல் பெருக்கும்.

வயலைக் கொல்லும் பூச்சிக் கொல்லிகள்
காயம் ஆக்கும் சாயத்தண்ணீர்

ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

ஊருக்கு அணி செய்யும்
பயிருக்கு உயிர் செய்யும்
உயிருக்கு நீர் வார்க்கும்
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

பாரெல்லாம் பயன் பெறவே
தூரெடுத்துத் தூர் வார்த்து
கரைகொண்டு கரை சேர்த்து
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

இளம் தொழில் முனைவோருக்கு சில ஆலோசனைகள்.

சர்வதேச நகரத்தார் வர்த்தக சபை சென்ற வருடம் துபாயை மையமாகக் கொண்டு இயங்கியபோது  தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் தொழில் அதிபர்களை இனம் காட்டியதோடு இளம் தொழில் முனைவோரையும் உருவாக்கத் திட்டமிட்டது.
இளம் தொழில் முனைவோருக்கு என்னென்ன குணாதிசயங்கள் தேவை , என்னென்ன திறமைகளைக் கைக்கொள்ள வேண்டும் என வழிகாட்டத் திட்டமிட்டது. இதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அக்குழு அதன் முதல் படியாக  அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவந்த செட்டிநாட்டுக்  குழந்தைகளுக்கு நம் வேர் பற்றியும், கலாச்சாரப்  பாரம்பரியப் பெருமைகள் பற்றியும், முக்கியமாக நம் சமூகக் கட்டமைப்பு & வியாபாரத் திறமைகள் பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

சனி, 21 அக்டோபர், 2017

கறிக்குழம்பு.


கறிக்குழம்பு.

வெசம் வைக்கத்தான் காசு வாங்கிட்டுப் போனியா “ முகமெல்லாம் ஜிவுஜிவுக்க வாசலிலேயே நிற்கவைத்து கேள்விச் சவுக்கால் விளாசிக் கொண்டிருந்தாள் புவனா.

“யக்கா என்ன அக்கா இப்பிடி கேக்குறீங்க. என்னய போய் இப்பிடிக் கேட்டீங்களே அக்கா.. “ திக்கித் திக்கி அழுது கொண்டிருந்தாள் கங்கம்மா.

“ஆத்தாளைப் பாத்துக்குறேன், ஆத்தாளைப் பாத்துக்குறேன்னு காசு வாங்கிக்கிட்டு கடோசீலஅண்ணன் தம்பி வீட்ல கொண்டு போய்த் தள்ளுனது பத்தாதா. சொத்த வாங்கக் கையெழுத்துக் கேட்டீங்க சரி. அது ஏண்டி ஒத்தப் பொட்டப்புள்ளயா ஒன்னப் பெத்தவளுக்கே வெசம் வைச்சுக் கொன்னு போட்டே பாவி “ கண்கள் கலங்க ஓங்கிக் குரலெடுத்து ஆங்காரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள் புவனா. கோபத்தில் அவள் உடல் அதிர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

”யக்கா என்ன நம்புங்கக்கா. நான் வெசம் எல்லாம் வைக்கல. அது ஆசைப்பட்ட கறிக்கொழம்பைத்தான் கொண்டு போனேன். சோத்துல போட்டு ஊட்டும்போது கூட கண்ணீர் விட்டுக்கிட்டே சாப்பிட்டுச்சுக்கா.. யக்கா. நானே எங்காத்தாளுக்கு வெசம் வைப்பனா..”

“இத எல்லாம் நம்பச் சொல்றியா. அப்பிடியே வெளிய போயிரு. எனக்கு ஆளும் வேணாம் தேளும் வேணாம். ஒம் மூஞ்சீல முழிக்கக்கூடப் பிடிக்கல. நீயெல்லாம் ஒரு மனுசியா. நீ சமைச்சத இனி எனக்குத் திங்கப் பிடிக்குமா. எங்க எனக்கும் வெசம் வைச்சிருவியோன்னுதான் பயமா இருக்கும் .. போ வெளியே “ என்று கத்தினாள் புவனா.

அவளது மூர்க்கத்தின் முன் நடுங்கி மயக்கம் வந்தவளாய்த் தடுமாறி எழுந்து சுவரைப் பிடித்து கதவைப் பிடித்து அழுது வடிந்த கண்களை முந்தானையால் துடைத்தபடி வெளியேறினாள் கங்கம்மா.

தீபாவளிக் கோலங்கள்.

தீபாவளிக் கோலங்கள்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

இந்தியாவின் ”ஜோன் ஆஃப் ஆர்க்” என்று சரித்திர ஆய்வாளர் வேங்கடத்தால் புகழப்பட்டவர், தனது ஐம்பதாவது வயதில் வாளேந்திப் போராடி சிவகங்கைச் சீமையை மீட்டு அரசோச்சியவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.  

”பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ராணி லெக்ஷ்மிபாயின் வீரம் பேசப்பட்ட அளவு தென்னிந்திய ராணி வேலுநாச்சியாரின் வீரம் பேசப்படவில்லை. ஆனால் லெக்ஷ்மிபாயின் போராட்டத்துக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர் வேலுநாச்சியார்” என்று கூறுகிறார் சரித்திரப் பேராசிரியர் சஞ்சீவி.

செவ்வாய், 17 அக்டோபர், 2017

சனி, 14 அக்டோபர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ராதிகா யோகேந்தரின் புத்தகப் பையோடு மறைந்த பாட்டி

என் அன்பிற்குரிய (முகநூல் ) தங்கை ராதிகா யோகேந்தர். அசப்பில் என் இன்னொரு தங்கை லல்லி மாதிரியே இருப்பார். குறும்பிலும் கூட. நிறைய வாசிப்பார். தினம் போடும் ஸ்டேட்டஸ்களில் நகைச்சுவை அள்ளும். அவ்வப்போது கணவரிடம் வாங்கிய பல்புகளையும் பகிர்ந்து சிரிக்க வைப்பார். மொத்தத்தில் உற்சாகப் பந்து. அன்பின் உருவம்.

இவரிடம் நான் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அவங்க பள்ளிபருவ நினைவுகள் அல்லது கார் ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்கள் பத்திக்  கேட்டிருந்தேன். இந்த வாரம் கேட்டதுக்கு உடனே வரமளித்து விட்டார்ப்பா. அதிலும் புதன் இரவு கேட்டதுக்கு வியாழன் இரவே அனுப்பி விட்டார். நிறைய பேரிடம் கேட்டு எல்லாம் பெண்டிங்கில் இருக்கு. ( அவங்கள எல்லாம் பின்னாடி கவனிச்சுக்குறேன். கிர்ர்ர்ர் ) :) தாங்க்ஸ் டா ராதி உடனே அனுப்பிச்சதுக்கு
.


வணக்கம் நான் ராதிகா யோகேந்தர் ..நான் கோவைல வசிக்கிறேன் ..பிறப்பால் மலையாளி ஆனால் தமிழ் மேல் உள்ள ஆர்வத்துல தமிழ் லிட்ரேச்சர் முடிச்சு இருக்கேன்..அப்புறம் முகநூல், வாட்ஸ் ஆப்,இன்ஸ்டாகிராம் இதுல எல்லாம் களமாடிட்டு ,ஸ்முல் அப்டிங்கிற ஆப்ல பாட்டும் பாடிட்டே, வீட்டையும் கவனிச்சு,கணவர், குழந்தையை நல்லா பாத்துக்கிற ஒரு நல்ல குடும்பத்தலைவி..கணவர் அரசு பள்ளி ஆசிரியர், ஒரே மகள் சின்ன அளவான மகிழ்ச்சியான குடும்பம்.

வெள்ளி, 13 அக்டோபர், 2017

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.

திருச்செந்தூரில் போர்புரிந்து வினையெல்லாம் தீர்த்த கந்தன்
திருத்தணி கோயில் கொண்டானாம்
அவன் பக்தர்கள் எல்லாம் காவடி தூக்கி வந்தாராம்

நெருங்கிச் செல்லுங்கள் முருகனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை.
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா ... அரோகரா .

அழகெல்லாம் முருகனே
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே.. ! தெய்வமும் முருகனே.
சென்னையில் இருந்து 87 கிமீ தூரத்தில் இருக்கிறது திருத்தணிகை. சுவாமிமலையில் தமிழ் வருடத்தின் 60 படிகள்  (என்றால் இங்கே ஒரு வருடத்தின் 365 நாட்களையும் குறிக்கும்படி 365 படிகள் உள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் படிகள் குறைவுதான். இன்னொரு இணைப்பில் 60 படிகள்தான் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். காரில் சென்றதால் தெரியவில்லை.  ) நடக்க எளிதானவைதான்.  ஒரு மாலையில் சென்றோம். மிக இனிமையாகவும் குளுமையாகவும் இருந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...